புதன், 4 மே, 2011

கல்வியும் சுதந்திரமும் - அன்னை

இங்கு தரப்படும் கல்வியின் சிறந்த அம்சம் என்னவென்றால் அது சுதந்திரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் இங்குள்ள வாழ்க்கை அதிகபட்சமான செயல் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது இங்கு விதிகள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் மிகக் குறைந்தபட்சமாக உள்ளன.

பெரும்பாலும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு எப்படி கல்வியூட்டுகிறார்கள்? "இதைச் செய்யாதே", "நீ அதைச் செய்யக்கூடாது", "இதைச் செய்", "போ, அதைச் செய்" என்று கட்டளையிட்டபடி இருக்கிறார்கள். கட்டளைகள், விதிகள் என்றால் உங்களுக்குத் தெரியும், அந்தக் கல்வி முறைக்கும் இங்கு பின்பற்றப்படும் முறைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

மற்றெல்லா இடங்களிலுமுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இங்குள்ளவற்றை விட மிகவும் கண்டிப்பான விதிகள் உண்டு. ஆகவே, முன்னேற வேண்டும் என்னும் கண்டிப்பான விதி எதையும் உங்கள் மீது சுமத்தாததால் நீங்கள் விரும்பிய போது முன்னேறுகிறீர்கள், விரும்பாதபோது முன்னேறுவதில்லை, எவ்வளவு மெதுவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு மெதுவாகச் செல்கிறீர்கள் (மிகச் சாவதானமாக எல்லவற்றையும் செய்கிறீர்கள்) ஒருவருமே முயற்சி செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். முயற்சி செய்கிறவர்களும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தன்னியல்பாக முயல்கிறார்கள்.

ஆன்மீக நோக்கிலிருந்து பார்க்கும்போது இது கோடி மடங்கு அதிகப் பயனுள்ளது. முன்னேற வேண்டியதின் தேவையை உன்னுள் உணர்வதனால், இயல்பாக ஒரு தூண்டுதல் உன்னை முன்னே தள்ளுவதனால் செய்யும் முன்னேற்றம் ஒரு விதியாக உன்மேல் சுமத்தப்படும் முன்னேற்றத்தைவிட ஆன்மீக நோக்கில் கோடி மடங்கு உயர்வானது. காரியங்களை நன்றாகச் செய்ய வேண்டுமென உன்னுள் முயல்கின்றவையெல்லாம் தன்னியல்பாகவும், நேர்மையுடனும் அப்படிச் செய்ய முயல்கின்றன. அந்தத் தூண்டுதல் உன் உள்ளே இருந்தே வருகின்றது. நன்றாகச் செய்தால் வெகுமதிகள் கிடைக்கும், மோசமாகச் செய்தால் தண்டனைகள் கிடைக்கும் என்று சொன்னதனால் அன்று. நமது கல்வி முறை அந்த அடிப்படையில் அமையவில்லை.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உனது முயற்சியைப் பாராட்டும் வகையில் ஏதாவது வரலாம். ஆனால் அதை மனதில் கொண்டு நீ முயற்சி செய்யவில்லை அதாவது, இந்தப் பாராட்டு முன்னாலேயே அறிவிக்கப்படவில்லை, செய்யத் தவறினால் தண்டனைகள் கிடைக்கும் என்ற பயமுறுத்தலும் அதோடு இணைக்கப்படவில்லை. அந்த வழக்கம் இங்கே இல்லை. நன்றாகச் செய்தோம் என்ற உணர்ச்சியே எல்லா வெகுமதிகளிலும் சிறந்த வெகுமதியாகத் தோன்றும்படி இங்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.

ஒருவன் மோசமாகச் செய்யும்போது அவன் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொள்கிறான், அவன் சங்கடப்படுகிறான், மகிழ்ச்சியை இழக்கிறான், மனத்தில் அமைதியின்றி இருக்கிறான், இதுவே மிகவும் கண்கூடாக அவன்பெறும் தண்டனை. ஆகவே, ஆன்மீக வளர்ச்சி நோக்கில் இந்த இயக்கங்களெல்லாம், அவை ஒரு புறச்சட்டத்தின் விளைவாக வருவதைவிடக் கோடி மடங்கு அதிகப் பயனுடையவைகளாக இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக