எனது பழைய வாழ்வெல்லாம் கழன்று போய்விட்டது, எனது பிழைகளுடன் எனது வெற்றிகளும் போய்விட்டன. அவையெல்லாம் போய் அந்த இடத்தில் இப்போதுதான் பிறந்த ஒரு குழந்தை, அதன் வாழ்வு முழுவதும் இனிமேல்தான் உருவாக்க வேண்டியதாகவுள்ள, கர்மம் ஒன்றும் ஒட்டாத, பயனடைந்து கொள்ளும்படியான அனுபவம் ஒன்றும் இல்லாத, ஆனால், அதே சமயம் சீர் செய்ய வேண்டிய பிழைகளும் இல்லாத ஒரு குழந்தை வந்துள்ளதுபோல் இருக்கிறது. எனது மூளை எல்லா அறிவும் எல்லா நிச்சயமும் நீங்கிப்போய் வெறுமையாய் சூன்யமாயிருக்கிறது.
அதேபோல் எல்லா வீணான சிந்தனைகளும் போய்விட்டன. எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்த நிலைக்கு என்னைச் சரணாகதி செய்துவிட்டால், அறியவோ புரிந்துகொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால், முற்றிலும் ஏதும் அறியாத வெள்ளையுள்ளம் கொண்ட குழந்தையாக இருக்க நான் சம்மதித்துவிட்டால், எனக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று உணர்கிறேன். நான் என்னை முற்றிலுமாக உமக்கும் கொடுத்துவிட்டு உமது சிந்தனை, உமது சித்தம் எவ்விதக் கோணலுக்கும் இடமின்றி சுதந்திரமாக எழுதப்படும்படியான, ஏதும் எழுதாத வெள்ளைத்தாளைப் போல் நான் ஆகிவிட வேண்டும் என்று எனக்குத் தெரிகிறது."
"பெரும் நன்றிப் பெருக்கு என் இதயத்தில் எழுகிறது. கடைசியாக இவ்வளவு காலமாகத் தேடிக்கொண்டிருந்த வாசலை அடைந்துவிட்டது போல் தோன்றுகிறது."
"ஏ பிரபு, வாசலை திட்டவட்டமாகக் கடக்கும் அளவிற்கு நான் தூய்மையும், நானற்ற தன்மையும் பெற்றும், உமது தெய்வீக அன்பால் உயிரூட்டப்பட்டும் இருக்குமாறு அருள்வீர்."
"இருளென்பதே இல்லாமல் எவ்வித வரையறையும் இல்லாமல் உமக்கே முற்றிலும் உரிமை ஆகிவிடுவதில் உள்ள ஆனந்தத்தை என்னவென்று கூறுவது!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக