புதன், 4 மே, 2011

அகங்கார முடிச்சை வெட்டு - அன்னை

அகங்கார முடிச்சு என்பது என்ன?

முடிச்சு? அது ஒரு உருவகம். ஆனால், அது நல்ல உறுதியான கயிற்றினால் போடப்பட்ட முடிச்சைப்போல உன்னை நன்றாக இறுக்கிப் பிடித்துககொண்டிருக்கிற ஒன்று. ஆகவே ஆன்மிகப் பாதையில் உண்மையாகவே முன்னேற வேண்டுமானால் முதற்காரியமாக அகங்கார முடிச்சை வெட்டிவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இது ஒரு நல்ல உருவகம், கருத்தை விளக்கமாகக் கூறுகிறது, அல்லவா? - உன்னைக் கட்டிப் போட்டிருக்கிறது. உனக்குள்ளேயே நீ அடைபட்டுக் கிடக்கிறாய், சிறையில் அடைக்கப்பட்டதைப் போல ஜீவனின் எல்லாப் பாகங்களும் சேர்த்துக் கட்டிப் போடப்பட்டிருப்பதால்தான் - ஒட்டியிருத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதே சமயம் அது வரம்பிற்கஉட்படுத்துகிறது.

உன்னைக் கட்டியிருக்கும் கயிற்றிலுள்ள முடிச்சுகளெல்லாம் சேர்ந்து உண்டாக்கிய ஓட்டிற்குள் அடைபட்டிருப்பதால் நீ பெற விரும்பும் அத்தனை சக்திகளையும் உன்னால் பெற முடியாது போகிறது.

அகங்கார முடிச்சை வெட்டுவது எப்படி?

எப்படி வெட்டுவதா? அது இருப்பதை உணர்ந்துகொண்டதும் ஒரு வாளை எடுத்து வீசு (சிரிப்பு). பொதுவாக அது இருப்பதை நீ உணர்வதில்லை. நமக்கு நேர்வதெல்லாம் மிகவும் சகஜமாகவே நமக்குத் தோன்றுகிறது. மிகவும் சகஜமானது என்பது உண்மைதான், ஆனால் நாம் அது நல்லது என்றும் நினைத்துவிடுகிறோம். ஆகவே, இந்த முடிச்சுகளெல்லாம் நம்மை இறுக்கிக் கட்டிப்போட்டிருக்கின்றன என்பதை உணர்வதற்கு மிகுந்த அறிவுத் தெளிவு தேவைப்படுகிறது.

அதன்பின், நம்மை ஒரு முடிச்சு இறுக்கிக் கட்டிப்போட்டிருக்கிறது - அதைக் கழற்ற முடியாதபடி அவ்வளவு இறுகலாகக் கட்டிப் போட்டிருக்கிறது - என்பதை உணர்ந்தபின், தனது இச்சா சக்தியை மிகக் கூர்மையான வாளின் அலகாகப் பாவித்துக்கொண்டு, தன் முழு சக்தியையும் கொண்டு இந்த முடிச்சை வெட்ட வேண்டும் (கற்பனை வாளால்தான், உண்மையிலேயே வாளைத் தூக்கிவிடுவதில்லை), இது நல்ல பலனைக் கொடுக்கும். ஆம், உளவில் நோக்கிலிருந்தும் இந்த வேலையைச் செய்யலாம்.

இந்த முடிச்சு எவற்றால் ஆகியிருக்கிறது, உன்னை மிகக்குறுகிய இடத்திற்குள் பிடித்து அடைத்து வைத்திருக்கிற எதிர்ப்புகள், பழக்கங்கள், விருப்பு வெறுப்புகள் எவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அவை இருப்பதைத் தெரிந்து கொண்டபின் நீ ஒருமுனைப்பட்டு, இறைவனது சக்தியையும் அருளையும் அழைத்து, எதனாலும் பிரிக்க முடியாதபடி நெருங்கிச் சேர்ந்துள்ள அந்த உருவமைப்பிற்கு சரியான அடி ஒன்று கொடுக்க வேண்டும்.

அதோடு அந்தச் சமயத்தில், இவற்றிற்கெல்லாம் நான் செவிகொடுக்கமாட்டேன், தெய்வ உணர்விற்கு மட்டுமே செவிகொடுப்பேன், சொந்த இலாப நஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எந்தப் பற்றுதல்களும் இல்லாமல், எந்த விருப்பு வெறுப்புகளும் இல்லாமல், வெற்றி, அதிகாரம், சுயதிருப்தி, இடம்பம் இவற்றையெல்லாம் விரும்பாமல் தெய்வ வேலை ஒன்றையே செய்வேன், வேறு எந்த வேலையையும் செய்யமாட்டேன் என்று தீர்மானம் செய்துகொள்ளவும் வேண்டும்.

....அவையெல்லாம் மறந்துவிட வேண்டும், தெய்வ சித்தம் ஒன்றே உனது இச்சாசக்தியில் உருவெடுத்து உன்னைச் செயல்படச் செய்வதை நீ காண வேண்டும். அப்பொழுது, இந்த முறையில், அகங்காரம் உன்னைவிட்டு அகலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக