அன்னையே, ஓர் ஆன்மிகச் சூழல் புறச் சூழ்நிலைகளை விட முக்கியமானது. அதுவும் கிடைத்து, தான் சுவாசிக்கவும் வாழவும் வேண்டிய தனது சொந்த ஆன்மிகக் காற்றையும் தானே உண்டாக்கிக் கொள்ள முடிந்தால், அதுவே முன்னேற்றத்திற்கு வேண்டிய சரியான நன்நிலை ஆகும். "அப்படிப்பட்ட சூழலைப் பெறுவதும் அதேசமயம் தன்னுடைய உண்மையான ஆன்மிகச் சூழலைத் தானே உண்டாக்கிக் கொள்வதும் எப்படி?
ஓர், அகவொழுக்கப் பயிற்சியின் மூலம் அதைச் செய்யலாம். உனது சிந்தனைகளை அடக்கி, அவற்றைச் சாதனை ஒன்றையே நோக்கித் திருப்புவதன் மூலம், உனது செயல்களை அடக்கி அவற்றைச் சாதனை ஒன்றையே நோக்கித் திருப்புவதன் மூலம், எல்லா ஆசைகளையும், பயனற்ற புறத்தன்மை கொண்ட, சாதாரண நடவடிக்கைகளையெல்லாம் நீக்கிவிடுவதன் மூலம், சாதாரண விஷயங்கள், சாதாரணச் சிந்தனைகள், சாதாரணச் செயல்கள், சாதாரண எதிர்ச் செயல்கள் இவற்றிலிருந்தெல்லாம் உன்னைப் பிரித்து, அதிகத் தீவிரமான அகவாழ்வு வாழ்வதன் மூலம், உன்னைச் சுற்றிலும் நீ விரும்பும் சூழலை உண்டாக்கிக் கொள்ளலாம்.
உதாரணமாக, கண்டதையெல்லாம் படிக்காமல் எதைப் பற்றியும் பேசி எதை வேண்டுமானாலும் செய்யாமல், யோகப் பாதையில் செல்வதற்கு உதவக்கூடியவைகளை மட்டுமே படித்தால், தெய்வானுபூதிக்கு இட்டுச் செல்வதற்கு இசைந்தவைகளை மட்டுமே செய்தால், புற விஷயங்களை நோக்கித் திரும்பிய ஆசைகளையும் தூண்டுதல்களையும் நீக்கினால், உன்னுடைய மனோமய ஜீவனை அமைதிப்படுத்தி உன்னுடைய பிராண ஜீவனின் தாபத்தைத் தணித்தால், வெளியேயிருந்து வரும் சூசனைகளை உன் உள்ளே வரவிடாமல் தடுத்து, உன்னைச் சுற்றிலும் இருக்கும் மனிதர்களின் செயல் உன்னைப் பாதிக்காத நிலையை நீ அடைந்தால் எதனாலும் தீண்ட முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்த ஆன்மிகச் சூழலை உருவாக்கிவிடுவாய், இனி உனது சூழல் சந்தர்ப்பங்களைப் பொறுத்ததாகவோ நீ யாருடன் வசிக்கிறாய், எந்த நிலையில் வசிக்கிறாய் என்பவைகளை பொறுத்ததாகவோ இருக்கவே இருக்காது.
ஏனெனில் நீ உன்னுடைய சொந்த ஆன்மிகச் சூழலாகிய வேலிக்குள் வாழ்கிறாய். அதைப் பெறும் வழி: ஆன்மிக வாழ்வு ஒன்றிலேயே கவனம் செலுத்துதல், ஆன்மிக வாழ்விற்கு உதவும் நூல்களை மட்டுமே படித்தல், ஆன்மிக வாழ்விற்கு இட்டுச் செல்லும் காரியங்களையே செய்தல், இப்படி அப்பொழுது உனது சூழலை நீயே உண்டாக்கிக் கொள்வாய். நீ எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்தால், பிறர் சொல்வதற்கெல்லாம் செவி சாய்த்தால், இவருடைய அறிவுரையின்படியும் அவருடைய அருளுரையின்படியும் நடந்தால், பிற விஷயங்களின்மேல் நிறைய ஆசை கொண்டிருந்தால், உன்னுடைய ஆன்மிகச் சூழலை நீயே உண்டாக்கிக்கொள்ள இயலாது. எல்லோருக்கும் இருப்பது போன்ற சாதாரண சூழ்நிலையே உனக்கும் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக