பொதுவாக மிகச் சில விஷயங்களே உங்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. உறங்குவது எப்படி என்றுகூட உங்களுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை. படுக்கையில் படுக்க வேண்டியதுதான். உறக்கம் வந்துவிடும். அவ்வளவுதான் எனப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அன்று!
எப்படிச் சாப்பிடக் கற்றுக்கொள்கிறோமோ, வேற எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோமோ, அப்படியே எப்படி உறங்குவது என்றும் கற்கவேண்டும். அப்படி ஒருவன் கற்றுக்கொள்ளாவிட்டால் அவன் தவறான முறையில் உறங்குவான். அல்லது பல ஆண்டுகள் அனுபவத்திற்குப் பின்பே சரியாக உறங்கக் கற்றுக்கொள்வான். சரியாக உறங்கத் தெரியாத அந்தக் காலமெல்லாம் அதன் காரணமாபபல தீமைகள் உண்டாகும்.
இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் நிறையப் பிழைகள் செய்து, மடத்தனமான காரியங்கள் பலப்பல செய்து, நிறையத் துன்பம் அனுபவித்தபின்பே நரைகூடிக் கிழப்பருவம் எய்திய பின்பே, ஒன்றைச் சரியாகச் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்கின்றனர். அப்படியில்லாமல், நீங்கள் சிறுவர்களாக இருக்கும்போதே, உங்கள் பெற்றோர்களோ அல்லது உங்களைக் கவனித்துக் கொள்கிற மற்றவர்களோ நீங்கள் செய்யும் காரியங்களையெல்லாம் எப்படிச் செய்வது, அவற்றைச் செய்யும் சரியான முறை எது என்று உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்களானால், பல ஆண்டுகாலமாக நீங்கள் அவற்றைப் பிழைபடச் செய்யும் தவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
இப்பொழுது நீங்கள் பிழைகள் செய்கிறீர்கள் என்பது மட்டுமன்று, நீங்கள் பிழையாகச் செய்கிறீர்கள் என்று உங்களுக்கு எடுத்துச் சொல்வாரும் இல்லை! ஆகவே அவற்றின் விளைவாக நீங்கள் நோயுறும் போது, களைப்படையும் போது, நீங்கள் செய்ய விரும்பும் ஒன்றை சரியாகச் செய்வது எப்படி என்று தெரியாமல் விழிக்கும்போது நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். சில குழந்தைகள் எதுவுமே சொல்லித் தரப்படாமல் வளர்கிறார்கள். ஆகவே மிக எளிய ஒரு விஷயத்தை மிகச் சாதாரண ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள, உதாரணமாக சுத்தமாக இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு எத்தனையோ ஆண்டுகள் பிடிக்கின்றன.
முறையாக வாழக் கற்றுக்கொள்வது மிகக் கடினமான ஒரு கலை. மிகச் சிறு பிராயத்திலேயே அதைக் கற்கத் தொடங்கி, அதற்காக முயற்சி எடுத்துக்கொள்ளாவிடில் ஒருவன் ஒருநாளும் அதைச் சரியாகக் கற்றுக்கொள்ளமாட்டான். உடலை நல்ல ஆரோக்கிய நிலையில் வைத்துக்கொள்ளவும், மனத்தின் அமைதியும் உள்ளத்தில் நல்லெண்ணமும் இருக்கக் கற்றுக்கொள்ளாவிடில் ஏதோ வாழ்க்கை என்று சொல்லிக் கொள்ளும்படியான வாழ்க்கை கூட ஒருவன் வாழமுடியாது.
இன்பமாக வாழ்வதைப்பற்றி, சிறப்பாக வாழ்வதைப்பற்றிப் பேசவில்லை. வாழ்க்கை என்று சொல்லிக்கொள்வதற்குரிய ஒரு வாழ்க்கை வாழ்வதற்கே இவையெல்லாம் இன்றியமையாதவை ஆகும். தங்களுடைய குழந்தைகளுக்கு இவற்றைச் சொல்லித் தருகிறவர்கள் பலபேர் இருக்கிறார்கள் என நான் நினைக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக