புதன், 4 மே, 2011

உணவும் உயர் வாழ்க்கையும் - அன்னை

நீ இந்தச் சாதாரண வாழ்க்கையிலிருந்து உயர்ந்ததொரு வாழ்க்கைக்குப் போக விரும்பினால் உணவு பற்றிய பிரச்சனை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக ஆகிறது. உயர் வாழ்க்கையை அடைந்துவிட்டபின், உருமாற்றத்திற்கு உன்னைத் தயாரிக்க நீ முயல்வதாயிருந்தால் இந்தப் பிரச்சனை அதிக முக்கியத்துவம் பெறும்.

ஏனெனில் சில உணவுகள் உடல் நுண்மையாவதற்கு உதவுகின்றன. வேறு சில அதை விலங்கு நிலையிலேயே வைத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்தக் காலத்தில்தான் அது அதிக முக்கியத்துவம் பெறுகிறது, அதற்கு முன்பு அன்று. அந்தக் காலத்தை அடைவதற்கு முன் செய்ய வேண்டியவை எத்தனையோ உள்ளன.

உன்னுடைய உடலைத் தூய்மை செய்ய எண்ணுமுன் மனத்தையும் பிராணனையும் தூய்மை செய்வது நல்லது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நீ எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துக்கொண்டு உடலளவில் உடலை நுண்மையாக்குபவைகளைத் தவிர வேறொன்றையும் உட்கொள்ளாதபடி கவனமாக இருந்தபோதிலும், உன்னுடைய மனமும் பிராணனும் ஆசை, உணர்வின்மை, இருள், வெறி முதலியவைகள் கொண்ட நிலையில் இருந்தால், அதனால் எந்த நற்பயனும் ஏற்படாது. அதனால் ஏற்படும் ஒரே பயன், உன் உடல் அகவாழ்வுடன் இணைப்புக்கெட்டுப் பலவீனமடையும், முடிவில் நோய்வாய்ப்படும்.

தூய்மை செய்யும் வேலை உள்ளேயிருந்து தொடங்க வேண்டும் என்று முன்பே ஒரு தடவை சொல்லியிருக்கிறேன். மேலேயிருந்து தொடங்கு வேண்டும். முதலில் உயர் பகுதிகளைத் தூய்மை செய்யவேண்டும், பிறகு கீழ்ப்பகுதிகளை தூய்மை செய்யவேண்டும். உடலால் எல்லாவிதமான கீழ்த்தரமான காரியங்களையும் செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை. நான் சொல்வது அது அன்று. உங்களுடைய ஆசைகளை அடக்க வேண்டாம் என அறிவுரை கூறுவதாக எடுத்துக்கொள்ளாதே! நான் சொல்வதன் பொருள் அதுவே அன்று.

நான் என்ன சொல்கிறேன் என்றால், மனத்திலும் பிராணனிலும் ஓரளவாவது தேவதூதன் போல் ஆவதற்குமுன் உடலில் தேவதூதன் ஆக முயலாதே என்பதுதான். அது வழக்கத்திற்கு மாறான முறையில் உன்னிடம் இணைப்புகோட்டை உண்டாக்கும். அது முன்னதைவிட மோசமாக இருக்கும். சமநிலை பிறழாமலிருப்பதே எல்லாவற்றிலும் முக்கியமானது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சமநிலை பிறழாமலிருக்க வேண்டுமானால் எல்லாம் ஒரே நேரத்தில் முன்னேறவேண்டும்.

உனது ஜீவனின் ஒரு பாகத்தை இருளில் விட்டுவிட்டு மற்றொரு பகுதியை ஒளிக்குக் கொண்டுவர முயலக்கூடாது. எந்த மூலையும் இருளில்லாதபடி நீ கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக