புதன், 4 மே, 2011

ஸ்ரீ அரவிந்த யோகம்

புண்ணிய பூமியாகிய இப்பாரத நாட்டின்கண் வேத உபநிடதங்களைக் கானம் செய்து சென்ற பண்டைக்கால முனிபுங்கவர்கள், உள்ளவன் ஒருவனேயென்றும், அவ்வொருவனது உண்மையின் பொறிகளே உலகமாயும், உயிர்களாயும் பரிணமித்தனவென்றும், அவனது லீலையினாலும் மாய சக்தியினாலும் இவ்வுயிர்கள் தங்களுக்கும் பரம்பொருக்கும் உள்ள ஒற்றுமையை மறந்து தனியுணர்வு பெற்று அஞ்ஞானத்தில் மூழ்கியிருப்பதே இவைகளின் பந்தங்களுக்கும் அல்லல்களுக்கும் காரணமென்றும், இழந்த ஒற்றுமையுணர்வை மீண்டும் பெற்று மாயா பிரகிருதியிலிருந்து விடுதலையடைந்து, அவனுடன் ஐக்கியப்படுவதே வாழ்வின் லட்சியம் என்றும் தங்களது அனுபவத்தில் கண்டறிந்தனர்.

இவ்விதம் அஞ்ஞானத்தினால் பிரிந்த உயிர்கள் மீண்டும் கடவுளுடன் ஒற்றுமைப்படுவதற்காகக் கையாளப்படும் முறையே யோகம் எனப்படுவது. நமது முன்னோர்கள் கண்ட யோக முறை இன்றும் நமக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. ஆயினும், நாளடைவில் அவரவர்களது தரிசனத்திற்கும் அனுபவத்திற்கும் தகுந்தாற்போல் யோக லட்சியத்திலும் யோக வழிமுறைகளிலும் வித்தியாசங்கள் ஏற்படவே, உபநிடதங்களின் சாரம் என மதிக்கப்படும் பகவத் கீதை தோன்றி, பல வழிமுறைகளையும் தொகுத்துக் கூறி, அவைகளை ஒன்றோடொன்று இணங்கும்படிச் செய்து, நமக்கு மேலானதொரு வழியையும் காட்டி விளங்குகின்றது. கீதை காட்டும் இவ்வழிதான் என்ன?

கீதையின் பரம இரகசியம்!

நான் என்னும் தன்முனைப்பு நசித்து, தாழ்ந்த, பரிபக்குவமற்ற, முக்குண மயமான மாயா பிரகிருதியிலிருந்து விடுதலையடைந்து, உலகத்தை துறந்து, சொரூபம் சலனம் என்பவையற்ற அக்ஷர பிரம்மனில் லயமாய் விடுவது யோகத்தின் ஒரு லட்சியமெனக் கீதை கூறுகிறது. ஆயினும், அதோடு நிற்காமல், வாழ்விலிருந்தகொண்டே ஜீவன் பூரணமடைவதன் பொருட் மேற்சொன்ன அக்ஷர பிரம்மனுக்கும், சர்வ பூதானியாயிருந்து பிரகிருதியின் சலனங்களுக்குட்பட்ட க்ஷர பிரம்மனுக்கும் அப்பால் சுதந்திரமாக நின்று, இவைகளெல்லாவற்றையும் நடத்தும் புருஷோத்தமனது உள்ளமை சத், சித், ஆனந்தம் என்னும் இயல்புகளுடன் ஒன்றுபட்டு (மத்பாவம் ஆகாதா), அவன்பால் சுதந்திரமாயிருந்து, உலகில் ஜீவன் முக்தனாக வினைபுரிவதே மேலான லட்சியமெனக் கீதை எடுத்துக் காட்டுகிறது.

நாம் காணும் அத்யாத்ம உண்மையைப் புறவாழ்க்கையிலும் உபயோகித்து, உலகின் மூலமாகப் பரமேச்வரனையும் உடைமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே அதன் முக்கிய உபதேசமாகும். நமது உண்மையான ஜீவன் கடவுளே என்பதையும், அது மற்ற ஜீவர்களுடன் ஒன்றுபட்டது என்பதையும் அறிந்து, நமது வாழ்க்கை முழுவதையும் கடவுளது நிலைக்கு உயர்த்துவது, அவனிடம் வசிப்பது, நமது உணர்வை அவனது உணர்வுடன் இணங்கச் செய்வது, நமது பரிபக்குவமடைந்த இயல்பை அவனது சம்பூரண இயல்பின் பிரதிபிம்பமாகச் செய்வது, நமது சிந்தனை, உணர்ச்சிகள் முற்றிலும் தெய்வீக ஞானத்தினால் தூண்டப்படும்படிச் செய்வது, நமது எல்லாவற்றையும் அவனுக்கே சமர்ப்பித்துவிடுவது, நாம் புரியும் வினைகளையெல்லாம் யக்ஞேச்வரனான அவனுக்கே வேள்வியாக அளிப்பது, புவனேச்சவரனையும் பராபரனாயும் உள்ள அவனது சித்தமும் வினைகளுமே நம் மூலமாக இவ்வுலகில் நடைபெறும்படி விடுவது, அவனது அன்பிலும் களிப்பிலும் நமது விருப்பம் லயித்து விடுவது - இதுவே பூரண நிலை, இதுவே மக்களது வாழ்வின் இறுதியான பொருளும் உண்மையான லட்சியமும், இதுவே கீதையின் பரம ரகசியம்.

ஸ்ரீ அரவிந்தரின் யோக வழி!

சற்றேறக்குறைய இம்மகா உபதேசத்தை, நமது நாட்டில் இதுகாறும் அப்போதைக்கப்போது தோன்றியுள்ள மகான்கள் தங்கள் தங்களது பிரத்தியேக அனுபவ வாயிலாகக் கூறி வந்திருக்கின்றனர். வேத உபநிடதங்களைக் காணம் செய்த ரிஷிகளின் பரம்பரையில் கடைசியாக உதித்த ஸ்ரீ அரவிந்தரும் இம்மகா உபதேசத்தையே தமது உபதேசத்திற்கும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார். ஆனால், ஸ்ரீ அரவிந்தர் வேத ரிஷிகள் கண்ட அனுபவத்தோடும் அவர்கள் வெளியிட்ட உபதேசத்தோடும் நின்றுவிடாமல், அவைகளினின்றும் தொடங்கி, அவைகளுக்கப்பால் சென்று, யோகத்திற்கு ஒரு புதிய லட்சியத்தையும் ஒரு புதிய வழி முறையையும் நிறுவியிருக்கிறார். அவரது யோகம் பூரண யோகம் அல்லது உபநிடதங்கள் கூறும் அதிமன யோகம் (Supramental Yoga) எனப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக