புதன், 4 மே, 2011

அகங்கார முடிச்சை வெட்டு - அன்னை

அகங்கார முடிச்சு என்பது என்ன?

முடிச்சு? அது ஒரு உருவகம். ஆனால், அது நல்ல உறுதியான கயிற்றினால் போடப்பட்ட முடிச்சைப்போல உன்னை நன்றாக இறுக்கிப் பிடித்துககொண்டிருக்கிற ஒன்று. ஆகவே ஆன்மிகப் பாதையில் உண்மையாகவே முன்னேற வேண்டுமானால் முதற்காரியமாக அகங்கார முடிச்சை வெட்டிவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இது ஒரு நல்ல உருவகம், கருத்தை விளக்கமாகக் கூறுகிறது, அல்லவா? - உன்னைக் கட்டிப் போட்டிருக்கிறது. உனக்குள்ளேயே நீ அடைபட்டுக் கிடக்கிறாய், சிறையில் அடைக்கப்பட்டதைப் போல ஜீவனின் எல்லாப் பாகங்களும் சேர்த்துக் கட்டிப் போடப்பட்டிருப்பதால்தான் - ஒட்டியிருத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதே சமயம் அது வரம்பிற்கஉட்படுத்துகிறது.

உன்னைக் கட்டியிருக்கும் கயிற்றிலுள்ள முடிச்சுகளெல்லாம் சேர்ந்து உண்டாக்கிய ஓட்டிற்குள் அடைபட்டிருப்பதால் நீ பெற விரும்பும் அத்தனை சக்திகளையும் உன்னால் பெற முடியாது போகிறது.

அகங்கார முடிச்சை வெட்டுவது எப்படி?

எப்படி வெட்டுவதா? அது இருப்பதை உணர்ந்துகொண்டதும் ஒரு வாளை எடுத்து வீசு (சிரிப்பு). பொதுவாக அது இருப்பதை நீ உணர்வதில்லை. நமக்கு நேர்வதெல்லாம் மிகவும் சகஜமாகவே நமக்குத் தோன்றுகிறது. மிகவும் சகஜமானது என்பது உண்மைதான், ஆனால் நாம் அது நல்லது என்றும் நினைத்துவிடுகிறோம். ஆகவே, இந்த முடிச்சுகளெல்லாம் நம்மை இறுக்கிக் கட்டிப்போட்டிருக்கின்றன என்பதை உணர்வதற்கு மிகுந்த அறிவுத் தெளிவு தேவைப்படுகிறது.

அதன்பின், நம்மை ஒரு முடிச்சு இறுக்கிக் கட்டிப்போட்டிருக்கிறது - அதைக் கழற்ற முடியாதபடி அவ்வளவு இறுகலாகக் கட்டிப் போட்டிருக்கிறது - என்பதை உணர்ந்தபின், தனது இச்சா சக்தியை மிகக் கூர்மையான வாளின் அலகாகப் பாவித்துக்கொண்டு, தன் முழு சக்தியையும் கொண்டு இந்த முடிச்சை வெட்ட வேண்டும் (கற்பனை வாளால்தான், உண்மையிலேயே வாளைத் தூக்கிவிடுவதில்லை), இது நல்ல பலனைக் கொடுக்கும். ஆம், உளவில் நோக்கிலிருந்தும் இந்த வேலையைச் செய்யலாம்.

இந்த முடிச்சு எவற்றால் ஆகியிருக்கிறது, உன்னை மிகக்குறுகிய இடத்திற்குள் பிடித்து அடைத்து வைத்திருக்கிற எதிர்ப்புகள், பழக்கங்கள், விருப்பு வெறுப்புகள் எவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அவை இருப்பதைத் தெரிந்து கொண்டபின் நீ ஒருமுனைப்பட்டு, இறைவனது சக்தியையும் அருளையும் அழைத்து, எதனாலும் பிரிக்க முடியாதபடி நெருங்கிச் சேர்ந்துள்ள அந்த உருவமைப்பிற்கு சரியான அடி ஒன்று கொடுக்க வேண்டும்.

அதோடு அந்தச் சமயத்தில், இவற்றிற்கெல்லாம் நான் செவிகொடுக்கமாட்டேன், தெய்வ உணர்விற்கு மட்டுமே செவிகொடுப்பேன், சொந்த இலாப நஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எந்தப் பற்றுதல்களும் இல்லாமல், எந்த விருப்பு வெறுப்புகளும் இல்லாமல், வெற்றி, அதிகாரம், சுயதிருப்தி, இடம்பம் இவற்றையெல்லாம் விரும்பாமல் தெய்வ வேலை ஒன்றையே செய்வேன், வேறு எந்த வேலையையும் செய்யமாட்டேன் என்று தீர்மானம் செய்துகொள்ளவும் வேண்டும்.

....அவையெல்லாம் மறந்துவிட வேண்டும், தெய்வ சித்தம் ஒன்றே உனது இச்சாசக்தியில் உருவெடுத்து உன்னைச் செயல்படச் செய்வதை நீ காண வேண்டும். அப்பொழுது, இந்த முறையில், அகங்காரம் உன்னைவிட்டு அகலும்.

தீய தூண்டுதல்களும் சிந்தனைகளும் - அ‌ன்னை

அன்னையே, நாங்கள் உம்மிடம் வரும்போது, எவ்வளவு நல்லவர்களாக இருக்க முடியுமோ அவ்வளவு நல்லவர்களாக இருக்க விரும்புகிறோம். அதாவது மிக நல்ல சிந்தனைகளுடன் வர விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் அதற்கு மாறாக பகலில் எங்களிடமிருந்த எல்லாத் தீய தூண்டுதல்களும் தீய சிந்தனைகளும் முன்னுக்கு வருகின்றன.

ஒருவேளை நீ அவற்றை நீக்கிவிடுவதற்கு வசதியாக அவை வரலாம். அவை வந்தால் அவற்றை அர்ப்பணித்து அவை உன்னிடமிருந்து நீங்கவேண்டும் என்று கேட்கலாம். அதுவேதான் காரணமாக இருக்கலாம், உயர் உணர்வு தூய்மை செய்வதற்காக வேலை செய்வதால் அவ்வாறு நடக்கலாம். குறைகளை மறைப்பதில் பயனில்லை, அவற்றைப் பின்னால் தள்ளி ஒரு திரையைப் போட்டுவிட்டதால் அவை இல்லாமல் போய்விடாது. தன்னுடைய நிலைமையை உள்ளது உள்ளபடியே தெரிந்துகொள்வது நல்லது. தனது தவறான வாழ்வை விட்டுவிட ஆயத்தமாக இருந்தால் அதுவே நல்லது.

நீ என்னிடம் வரும்போது எல்லா தீய இயக்கங்களும் மேலே வந்து, தங்களைக் காட்டிக்கொள்ள நீ அனுமதித்து, அவற்றை அர்ப்பணித்தால், "நான் இப்படித்தான் இரு‌ந்தேன்" என்று சொல்லி, அதே சமயம் அப்படி இருக்கக்கூடாது என்கிற ஆர்வமும் இருந்தால், நீ என் முன்னால் நிற்கும் இந்த விநாடி மிக அதிகப் பயனுள்ளதாக இருக்கும். ஆம், சில வினாடிகளில் அந்தத் தீய இயக்கங்களை நீக்கி விடுவதற்கான உதவியை நீ பெற்றுவிடலாம். மாறாக, நீ ஒரு சிறிய புனிதவான் மாதிரி வந்துவிட்டு ஒன்றையும் பெற்றுக்கொள்ளாமல் திருப்தியோடு போய்விட்டாயானால் அதனால் அதிகப் பயனில்லை.

உயர் உணர்வு... அவ்வாறு செயல்படுகிறது, முன்பு ஒளி இல்லாத இடத்தில் ஒளியைக் கொண்டுவரும் ஒளிக்கதிரைப் போன்றது அது. உன்னைப் பொறுத்தவரையில் அந்தத் தவறான இயக்கத்தை நீக்க விரும்பும் உள நிலையில் நீ இருக்க வேண்டும். அதை ஒட்டிப் பிடித்துக்கொள்ள விரும்பக்கூடாது. அதை உன்னிடமிருந்து நீக்கிவிட மனப்பூர்வமாக விரும்புவாயானால் அது அப்படி முன்னால் வருவது மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.

உனது சிறந்த நண்பன் - அன்னை

உன்னை மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு வர ஊக்குவிக்கிறவன், அவனோடு சேர்ந்து முட்டாள்தனமான காரியங்களைச் செய்ய அல்லது தவறான வழிகளில் செல்ல ஊக்குவிக்கிறவன், நீ செய்கிற அசிங்கமான காரியங்களுக்காக உன்னைப் பாராட்டுகிறவன் உன்னுடைய நண்பன் என்பதில் சந்தேகமில்லை...

யாருக்காவது தொற்றுநோய் இருந்தால் நாம் அவனுடன் நெருங்கிப் பழகமாட்டோம், கவனமாக அவனிடமிருந்து விலகிவிடுவோம். பொதுவாக அவனிடமிருந்து அந்த நோய் பிறருக்கும் பரவிவிடாமலிக்க அவனை ஒரு தனி இடத்தில் ஒதுக்கி வைப்பார்கள். தீயொழுக்கம், தவறான நடத்தை, கயமை, பொய், கீழ்மை இவையெல்லாம் எந்தத் தொற்று நோயையும்விட மோசமான தொற்று நோய்களாகும், இவற்றை வெகு கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

எவன் உன்னுடைய தவறான அல்லது அசிங்கிமான செயல்களில் பங்கு கொள்ள மறுக்கிறானோ, தவறான செயல்களைச் செய்யத் தூண்டுதல் ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்க எவன் உன்னை ஊக்குவிக்கிறானோ அவனே உன் நண்பன். அவனையே உன்னுடைய சிறந்த நண்பனாக நீ கருதவேண்டும். அப்படிப்பட்டவனுடன்தான் நீ பழகவேண்டும், எவனுடன் வேடிக்கைகளில் ஈடுபடலாமோ, எவன் உன்னுடைய தீய குணங்களைப் பலப்படுத்துகின்றானே அவனுடன் அன்று. அவ்வளவுதான்.

இதை நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. நான் யாரை மனத்தில் கொண்டு இதைச் சொல்கிறேனோ அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.

உண்மையில், யார் உன்னைவிட அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ, யாருடைய கூட்டுறவு உன்னைச் சான்றோனாக்குகிறதோ, உன்னை நீ அடக்கி ஆளவும், முன்னேறவும், நன்றாகச் செயல்படவும், விஷயங்களை மேலும் தெளிவாகக் காணவும் உதவுகிறதோ அவர்களையே நீ நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இறுதியாக, நீ பெறக்கூடிய மிகச் சிறந்த நண்பன், எல்லாவற்றையும் சொல்லக்கூடிய, உன்னை முற்றிலும் திறந்துகாட்டக்கூடிய நண்பன் இறைவனே அல்லவா? எல்லாக் கருணையின் ஊற்றும், திரும்பவும் செய்யாவிட்டால் நமது பிழைகளையெல்லாம் துடைத்துவிடக்கூடிய சக்தியின் ஊற்றும், உண்மையான சித்திக்கு வழியைத் திறப்பவனும் அவனே அல்லவா? எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவனும், பாதை‌யில் தவறாமல், தடுமாறாமல், வீழ்ந்துவிடாமல், இலட்சியத்தை நோக்கி நேரே நடந்துசெல்ல உதவுகிறவனும் அவனே.

அவனே உண்மையான நண்பன், வாழ்விலும் தாழ்விலும் நீங்காத நண்பன், உன்னைப் புரிந்துகொள்ளக்கூடிய, குணமாக்கக்கூடிய நண்பன், வேண்டும்போது எப்பொழுதும் ஓடிவரும் நண்பன். நீ மனப்பூர்வமாக அழைத்தால் உனக்கு வழிகாட்டவும், உன்னைத் தாங்கவும் அவன் எப்பொழுதும் இருப்பான் - அதோடு உண்மையான முறையில் உன்னை நேசிப்பான்

ஞாயிறு, 1 மே, 2011

ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னை
’கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்’ இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா. ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது. ’மதர்’ என்றாலும் ’ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும்.

கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மீக ஆற்றல்கள் பெற்றவராக விளங்கினார். வளர வளர இந்தியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். ஸ்ரீ அரவிந்தரை ஞானகுருவாகக் கனவில் கண்டவர், பின் பாண்டிச்சேரியை நாடி வந்து அவரையே முழுமையாகச் சரணடைந்தார். ஸ்ரீ அன்னை ஆனார்.

1878 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி பாரிசில் மிரா பிறந்தார். இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராகவும், எளியோருக்கு இரங்கும் குணம் கொண்டவராகவும் விளங்கினார். இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டிருந்த அவருக்கு தினம்தோறும் தியானத்தில் ஆழ்வதும், இறை ஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது. அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வரும். அந்தக் கனவில் மெள்ள மெள்ள தன் உடலை விட்டு வெளியேறுவார். வீடு, தெரு, நகரம் என எல்லாவற்றிலும் உயர்ந்து மேகக் கூட்டங்களினிடையே காட்சி அளிப்பார். பொன்னொளி வீசிக் கொண்டிருக்கும் அவர் உடலை, ஒளீவீசக் கூடிய ஒரு நீண்ட பட்டாடை தழுவிக் கொண்டிருக்கும். அவரை நோக்கி உலகின் எல்லாப் பக்கங்களிலிருந்தும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளிகளும், துன்பமுற்றவர்களும் வந்து நிற்பர். தனது கருணை பொங்கும் விழியால் அவர்களைப் பார்ப்பார் மிரா. ஒளீவீசும் அவருடைய பட்டாடையைத் தொட்டவுடன் சிலருக்குப் பிணி தீரும். சிலருக்கு மகிழ்ச்சி உண்டாகும். சிலரது குறைகள் உடனடியாக விலகும். மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும், அவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிச் செல்வர். தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக இக்கனவு அவருக்கு வந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில் மிர்ரா அன்னையாக உயர்ந்த போது, அவர் அளித்த பால்கனி தரிசனத்திற்கு முன் மாதிரியாய் இக்கனவு அமைந்திருந்தது

பிரான்சில் அன்னை வசித்த போது அவரது கனவில் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்களும் தோன்றி பல உண்மைகளை அவருக்கு போதித்தனர். அவர்களுள் ஒளி வீசும் கண்களுடனும், நீண்ட தாடியுடனும் ஒரு மனிதர் அடிக்கடி வந்தார். அவர், இந்தியத் தத்துவங்கள் பற்றியும், வேத உபநிஷத்துகள் பற்றியும் எடுத்துரைத்தார். ஓவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த அன்னை அவரது உருவத்தை ஓவியமாக வரைந்து கொண்டார். பிற்காலத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்த போது, அவரே தனக்கு கனவில் வந்து பல உண்மைகளை போதித்த ஆசான் என்பதையும், அவரே தனது குரு என்பதையும் கண்டு கொண்டார். அவரையே முழுமையாகச் சரணடைந்தார். தனது ஆன்ம ஆற்றலால் ஸ்ரீ அன்னையாக உயர்ந்தார். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை ஒரு முன் மாதிரி ஆசிரமாக உருவாக்கினார். இந்தியாவின் யோக ஞான மரபு செழுமையுற உழைத்தார்.

ஒரு முறை ஆசிரமத்தில் உள்ள சாதகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அரவிந்தரால் ‘ஸ்ரீ அன்னை’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் அன்னையும் தங்களுடன் தற்போது இருக்கும் அன்னையும் ஒருவர் தானா என்று. தங்களின் சந்தேகத்தை அரவிந்தரிடமே கேட்டனர். அதற்கு ஸ்ரீ அரவிந்தர் ’சந்தேகமென்ன. அந்தப் பராசக்தியே இங்கே மானிட உருவில் சாதகர்களை வழி நடத்திச் செல்ல முன் வந்திருக்கிறாள். இதில் ஐயமே வேண்டாம்’ என்று விடையளித்தார்.

பராசக்தியின் அம்சமான அன்னை சாதகர்களை பல விதங்களில் ஊக்குவித்தார். எப்போதும் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டுவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். நேர்மை, உண்மை, சத்தியம், தூய்மை இவற்றைக் கொண்டதாக வாழ்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ’Never look at the Future with the Eyes of Fears’ என்றும் Let not the talk of the vulgar make any impression to you என்றும் பலவாறாக அவர் போதித்த தத்துவங்கள் எண்ணற்றவை. மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சகோதரர்களாக ஒருமித்த உணர்வுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ‘ஆரோவில்’ நகரை நிர்மாணித்தார். இன்று அது ஒரு சர்வ தேச நகரமாகத் திகழ்கிறது.

ஸ்ரீ அன்னையால் பல்வேறு அற்புதங்களும் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன.

ஒரு நாள் புதுவையில் பலத்த புயல் வீசியது. பல மரங்கள், வேரோடு சாய்ந்தன. கடல் பொங்கி உள்ளே வந்து ஆசிரமம் உட்பட பலவற்றை அழிக்கும் சூழல் உருவாகியது. மக்கள் உட்பட பலரும் செய்வதறியாது திகைத்தனர். என்ன செய்வதெனப் புரியாமல் ஸ்ரீ அன்னையிடம் வந்து வேண்டிக் கொண்டனர். அன்னையும் அவர்கள் வேண்டுகோளுக்கு மனமிரங்கினார். தியானத்தில் ஆழ்ந்தார். சூட்சும உருவில் சென்று கடல் தேவதையின் முன் நின்றார். ஆசிரமம் பற்றியும் சாதகர்கள் பற்றியும், அதன் நோக்கம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அப்பாவிகளை அழிப்பதால் நேரும் துன்பத்தைப் பற்றியும் தேவதைக்கு எடுத்துச் சொன்னார். பெரிய பெரிய கற்களைக் கொண்டு வரச் செய்து, அவற்றை கரையோரத்தில் போடச் செய்தார். அதைத் தாண்டி நகருக்குள்ளே வரக் கூடாது என்று கடல் தேவதைக்குக் கட்டளையிட்டார். அன்னையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட கடல் பின் வாங்கியது. அது முதல் அது, கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தனது எல்லையைத் தாண்டி நகருக்குள் வருவதில்லை.

ஒரு முறை ஸ்ரீ அன்னை ஆசிரமத்து சாதகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென தனக்குள் சமாதி நிலையில் ஆழ்ந்தார். வெகு நேரம் கழித்தே அவர் தனது கண்களைத் திறந்தார். சாதகர்கள் காரணத்தை வினவிய பொழுது, தான் கிரீஸ் நாட்டிற்குச் சென்று விட்டு வந்ததாகவும், பல பக்தர்கள் மானசீகமாக தன் உதவி வேண்டி அழைத்ததால், சூட்சும உருவில் அங்கு சென்று உதவி விட்டு வந்ததாகவும் அன்னை குறிப்பிட்டார்.

ஆம், அன்னையைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை. நாம் மானசீகமாக, உண்மையாக அழைத்தால் அங்கு ஸ்ரீ அன்னையே நம்மைத் தேடி வருவார். ஸ்ரீ அன்னையே சாதகர்களிடம் இது குறித்து, ‘நேர்மையான பிரார்த்தனைகள் யாவும் நிறைவேற்றப்படுகின்றன. ஒவ்வொரு அழைப்புக்கும் நிச்சயம் பதில் உண்டு’ என்று தெரிவித்திருக்கிறார். அதிலும் ஸ்ரீ அன்னை குறிப்பிட்டுள்ள மலர்களை வைத்து வணங்கும் பொழுது அவரது ஆற்றல் அங்கே பலவாறாகப் பெருகுகிறது. அன்னையின் அருளைப் பெறத் தேவை நம்பிக்கையும், அர்ப்பணிப்பு உணர்வும் மட்டுமே.

ஸ்ரீ அன்னையின் அறிவுரைகள் சிலவற்றை அவரது பிறந்த நாளான இன்று நினைவு கூர்வோம்.

1. மனிதனின் அதிருப்திக்கு, சோகத்திற்கு, தோல்விகளுக்கு அவனுடைய தான் என்ற எண்ணமே, அகந்தையே மிக முக்கிய காரணம் ஆகிறது.

2.’பக்தி’ என்பது தனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வது அல்ல. இறைவனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான பக்தி

3. நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்

4. நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாயாக இருக்கிறது. உயர்விற்குத் தேவை பூரண நம்பிக்கையே!

5. ஒருவன் எவ்வளவு நேரம் தியானம் செய்கிறான் என்பது ஆன்மிக முன்னேற்றத்தைக் காட்டாது. மாறாக தியானம் செய்ய எந்த முயற்சியுமே தேவையில்லை என்னும் நிலையை எட்டுவதே உண்மையான ஆன்மிக முன்னேற்றமாகும்.

6. இறைவனிடம், ‘நமக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று வேண்டுவதை விட, நமக்குத் தேவையானது எதுவோ, அதை, அவனே தருமாறு ஒப்படைப்பது சிறந்தது.

அன்னையைப் போற்றிடுவோம்; அவள் பாதம் பணிந்திடுவோம்
அன்னையும் காத்திடுவாள்; என்றும் ஆனந்தம் தந்திடுவாள்

ஓம் ஸ்ரீ ஆனந்தமயி;
ஓம் ஸ்ரீ சைதன்ய மயி;
ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!

திங்கள், 14 மார்ச், 2011

எதற்கும் அஞ்சாதே, எதனையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே

எதற்கும் அஞ்சாதே, எதனையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே : ஸ்ரீ அரவிந்தர்!

உனது ஆத்மாவையே அனைத்திலும் காண்; எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே. உலக அரங்கில் உன் பங்கை வலிமையோடும், துணிவோடும் ஆற்றிடு. அவ்வாறே நீ உனது உண்மையான இயல்பின்படி இருப்பாய், வெற்றியானாலும், தோல்வியானாலும், சாவானாலும், சித்ரவதையானாலும் அனைத்திலும் தெய்வமாகவே இருப்பாய் - தெய்வத்திற்குத் தோல்வி ஏது? சாவு ஏது?

மீண்டும் உனக்குச் சொல்கிறேன், வலிமையுடையவனும், துணிவுடையவனுமே கடவுளை அடைவான். கோழையும், பலவீனனும் கடவுளை அடைவதில்லை.

வான வீதி எங்கனும் நட்சத்திரங்களைப் பரப்பி வைத்தவனும், மாலை மாலையாக ஞாயிறுகளை கோர்த்து வைத்தவனும் நீயே. இன்று என்னுள் உள்ள உனக்குச் செவி சாய்த்துக் கொண்டிருக்கின்ற நீயே, பழமையான அந்த யோகத்தின் சக்தியால், செயலற்ற மோனத்தில் நிற்கும் இச்சா சக்தியால் நீயே இவற்றைச் செய்தாய். பழமையான யோகத்தின் செல்வனே, ஏறிட்டுப் பார், நடுக்கத்தை விடு, சந்தேகத்தை ஒழி, அச்சமும், ஐயமும், கவலையும் உன்னைத் தீண்டாதொழிக. தனது மூச்சுக் காற்றால் அண்ட கோளங்களை ஆக்கவும், அழிக்கவும் வல்லவன் ஒருவன் உன்னுள் வதிகின்றான் என்பதை மறவாதே.

எல்லா உயிர்களிடத்தும் தன்னையே காண்பவன் எப்படிப் பகைக்க முடியும்? அவன் எதனிடம் இருந்தும் அஞ்சியோ, கூச்சமுற்றோ ஒதுங்குவதில்லை. அவனுக்கு எதனிடத்தும் அச்சமோ, வெறுப்போ கிடையாது. அதோ எல்லா மனிதரும் வெறுத்தொதுக்கும் தொழுநோய் கொண்டவன் - ஆனால் என்னால் அவ்வாறு ஒதுக்க முடியுமோ? கடவுளன்றோ இந்த விநோத வேடம் புணைந்து சிரிக்கின்றான்.

உன்னை வாளால் வெட்டி வீழ்த்துவேன், குண்டுகளால் துளைத்திடுவேன், நெருப்பில் பொசுக்கிடுவேன், பீரங்கி வாயில் வைத்து கொளுத்திடுவேன் என்றா சொல்கிறாய்? நான் வெட்ட முடியாதவன், பிளக்க முடியாதவன், துளைக்க முடியாதவன், எரிக்க முடியாதவன், நான் அசைவற்றவன், நான் அணிந்துள்ள அன்னமய கோசமாம் சட்டையை மட்டுமே உன்னால் கிழிக்க முடியும் - நான் எப்பொழுதும் இருந்தது போலவே இருப்பேன். உன் மீது கோபம் கொள்ளக்கூட மாட்டேன். குழந்தை விளையாட்டில் அல்லது சிறுபிள்ளை கோபத்தில் ஆடையை கிழித்துவிட்டது என்பதற்காக கோபப்படுவார்களோ.

சாதாரண மனிதர்கள் கூட நாயிலும் கழுகிலும், பாம்பிலும் தேளிலும் தங்கள் ஆன்மாவைக் காண்கின்ற, சாவை என் சகோதரனே என்றும், அழிவை என் சகோதரியே என்றும் அனைத்துக் கொள்கின்ற, அதற்கும் ஒரு படி மேலே சென்று சாவும், அழிவும் நாமன்றி வேறில்லை என்றே அழுகின்ற நாள் ஒன்று வந்தே தீரும். "சர்வ பூதேஷு ஆத்மானாம்" என்று மறை சொல்கிறதே.

எனது மனைவி மடிந்துவிட்டாள் என்று அழுவேனா? அவள் எங்கே போய்விட்டாள்? அன்று அவள் உடல் எனது அணைப்பில் இருந்ததற்போலவே இன்றும் என்னுடன் மிக நெருங்கி இருக்கின்றாள். ஏனெனில் அவளது ஆத்மாவும், என்னுடைய ஆத்மாவும் ஒன்றே அன்றோ?

உள்ளது ஒரே ஆத்மாவே என்ற ஞானம் வந்தபோது வேறுபாடுகளெல்லாம் பறந்துபோம். எல்லையற்ற அமைதி, அளக்க முடியாத அன்பு, கரைகாணா கருணை, முடிவற்ற சகிப்புத்தன்மை இவையெல்லாம் கடவுளைக் கண்ட தீரான்மாவின் இயல்பானத் தன்மைகளாம்.

மொழிபெயர்ப்பு : ச. மகாலிங்கம்
வைகறை இதழில் இருந்து.

சிவலிங்க உருவை நினைவூட்டும் நாகலிங்கபூ!!!

சிவலிங்க உருவை நினைவூட்டும் நாகலிங்கபூ





சிவாலயங்களில் கருவறையில் மட்டுமின்றி, உள் மற்றும் வெளிப் பிராகாரங்களிலும் சிவபெருமானின் அருவுருவ வடிவமாகத் திகழும் சிவலிங்கத்தை நாம் தரிசிக்கிறோம். பொதுவாக சிவலிங்க மூர்த்தத்தைத் தரிசிக்கும்போது பக்தர்கள் மனதில் ஒரு உன்னதமான பக்தியும் மனநிறைவும் ஏற்படுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு "நாகாபரணம்' எனப்படும் வெள்ளி அல்லது தங்கத்தாலான அணிகலனை சார்த்தி, அதன்மீது அலங்காரங்கள் செய்யும்போது, சிவலிங்கத்தின் கம்பீரமும் வனப்பும் நம் நெஞ்சை அள்ளுகின்றது.

நாகாபரணம் சார்த்தப்பட்ட சிவலிங்கத்தைப் போன்றே அமைப்புள்ள ஓர் அழகிய மலர்தான் நாகலிங்கப்பூ ஆகும். இந்த மலரை தெலுங்கு மொழியில் "நாகமல்லி' என்றும்; "மல்லிகார்ச்சுனம்' என்றும் அழைக்கின்றனர். அழகிய வட்ட வடிவமான வெண்மைநிற ஆவுடை, அதன் நடுவில் சிறிய பாணலிங்கம், சிவலிங்கத்தின்மீது கவிழ்ந்து குடை பிடிப்பது போன்ற எண்ணற்ற தலைகளையுடைய நாகம், ஆவுடையாரைத் தாங்குவதுபோல் குங்கும நிறத்தில் ஐந்து இதழ்கள்- இத்தகைய தோற்றம் கொண்ட ஒரு அழகான மலர்தான் நாகலிங்கப் பூ.

"பிரேஸில்நட்' என்ற குடும்பத்தைச் சேர்ந்தது நாகலிங்க மரமாகும். இந்த மரம் நம் நாட்டைச் சேர்ந்ததல்ல! தென் அமெரிக்காவின் பிரேஸில் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பலவகை மரங்களில் இதுவும் ஒன்றாகும். கரடுமுரடான மேல்பட்டை யுடன் தூண்போல உயர்ந்து வளரும் தன்மையுடையது இந்த மரம். இதில் ஆரஞ்சு, குங்கும நிறம், இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் மலர்கள் மலர்கின்றன. இந்த மலர்கள் பீரங்கி குண்டுகளைப் போன்று உருண்டு திரண்ட காய்களாக மாறுகின்றன. இதனால் இந்த மரத்திற்கு பீரங்கி குண்டு மரம் (கானன் பால் மரம்) என்று பெயர் ஏற்பட்டது. மரத்தைச் சுற்றிலும் ஒட்டிக்கொண்டிருக்கும் தவிட்டு நிறக் காய்களைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கும்.

நாகலிங்க மலரானது, நாகாபரணத்து டன் திகழும் சிவலிங்கத்தை நினைவுபடுத்துவதால், பல சிவாலயங்களில் இது வளர்க்கப்படுகிறது. பூக்கள் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றன. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், நாகர்கோவில் நாகராஜர் ஆலயம் போன்ற இடங்களில் இந்தப் பூக்கள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு ஆலயங்களில், அப்பகுதியில் அதிக அளவில் காணப்படும் ஒரு மரம் ஆலயத்தின் தலவிருட்சமாகப் போற்றப்பட்டு வருவதும், அந்த மரத்தின் பெயரை ஒட்டியே ஆலயத்தின் பெயர் அமைந்திருக்கும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் நாகலிங்க மரம் நம் நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதால், இது எந்த தலத்திலும் தல மரமாக இல்லை. இந்த மலரை நாம் நம் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும்போது ஒரு அழகிய சிவலிங்கத் திருமேனியை நாம் நம் கையில் வைத்திருப்பது போன்ற ஒரு மென்மையான உணர்வை அனுபவிக்க முடியும்!

பூமிக்கு ஒலியுட்ட வந்த தேவதை ஸ்ரீ அன்னை


ன்னையின் குழந்தைப் பருவத்தில் நடந்த சில சம்பவங்கள் உணர்வுப்பூர்வமாக அமைந்தவை ஆகும். இதுபற்றி விளக்குகிறார் சென்னை மேற்கு மாம்பலம், அயோத்யா மண்டபம் அருகே உள்ள ஸ்ரீஅரவிந்தர் அன்னை தியான மையத்தைச் சேர்ந்த

ஸ்ரீ அன்னை அடிகள்.

அன்னை எப்போதும் உள்நோக்குடைய குழந்தையாகவே இருந்திருக்கிறார் என்பது அவரின் நான்காவது வயதின்போதே வெளிப்பட்டது. அந்த நான்கு வயதில் அவர் அமர்வதற்காக அவருக்கென்று பிரத் யேக நாற்காலி ஒன்று செய்யப்பட் டது. அதில் மௌனமாக அமர்ந்து கொண்டு, தன்னுடைய மூளையை அதிவேகமாகச் சுழலச் செய்யும் அற்புதப் பேரொளி தனக்குள் இறங்கு வதாக அவர் சாதகம் செய்வார். அவருடைய தாயாரோ பகுத்தறிவா ளர். அதனால், தன் மகளின் தன் வயப்பட்டிருக்கும் நிலையைப் பார்த்து எரிச்சலடைந்ததும் உண்டு.

""உலகமே உன்னை அமுக்குவது போல, ஏன் இப்படி முகத்தை ஆடாமல் அசையாமல் வைத்திருக்கிறாய்?'' என்றார் ஒருநாள்.

அதற்கு ஸ்ரீ அன்னை அளித்த பதிலில் ஆன்ம ஆழம் இருந்தது... ""ஆமாம்; உலகின் துக்கமெல்லாம் என்னை அழுத்துவதை நான் உணரத் தான் செய்கிறேன்'' என்று அன்னை பதிலளித்தார். காரணம் அவரின் மேலிருந்து பாயும் பேரொளி... அதுவே பிற்காலத்தில் அவர் சிரத்தைச் சூழ்ந்திருந்த பிரபையாக மாறியது. அதனை இறுதிவரை உணர்ந்தி ருந்தார் ஸ்ரீ அன்னை.

""என்னுடைய குழந்தைப் பருவம் முதல், என் வாழ்வின் இறுதி வரை இதைப் பார்த்திருக்கிறேன். இதை அனுசரித்தே வந்திருக்கிறேன். இதுவே எனக்கு வழிகாட்டியாகவும் இருந்தி ருக்கிறது'' என்று அன்னையே கூறியிருக்கிறார்.

உலகத்திற்கும் மனித இன மேம்பாட்டிற்கும் ஒளிமயமான மகோன்னத எதிர்காலம் பற்றிய உணர்வில் அவருடைய குழந்தைப் பருவம் உருமாற்றமடைந்தது என்பதே உண்மை! உள் வயப்படும் உணர்வு பொதுவாகவே அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்து தெரிய வருகிறது. அவருக்கு சுமார் பன்னிரண்டு வயதானபோது அவருக்குள் ஒரு சூசகமான உணர்வு அமைந்தது. அதாவது... ஆர்வமிக்க மக்களைத் தலைமை தாங்கிப் புதுயுகமொன் றுக்கு அழைத்துச் செல்லும் முன்னோடியாக தான் விளங்க இருக்கும் உணர்வே அது...

""பதினோரு வயதிலிருந்து பதின்மூன்று வயதிற்குள் எனக்குத் தொடர்ச்சியாகப் பல ஆன்மிக- ஆவியூடாடிய தரிசனங்கள் தோற்றமா யின. ஆண்டவன் உள்ளார் என்றும், மனிதன் அவரைச் சந்திக்க வாய்ப்பு உண்டு என்ற உணர்வும் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தன் பிரக்ஞையில் ஆண்டவனை முற்றுமாக உணர்ந்து, ஒரு தெய்வீக வாழ்க்கை வாழலாம் என்று புலப்பட்டன'' என்றார் அன்னை.

அறிதற்கரிய இந்த உணர்வுகளே ஸ்ரீஅன்னை யின் இளமைப் பருவத்தில் இதயத்தை வருடிய தாக அமைந்தன. அதனால் ஒவ்வொருவரும் உணர்வின் உருமாற்றம் பெற்று தெய்வீக நற்பண்புகளுடன் திகழ்வதற்காகவே அனைவருக் கும் அழைப்பு விடுக்கிறார் ஸ்ரீ அன்னை.

அதுமட்டுமா?

உணர்வின் உருமாற்றத்திற்குப் பின்னர், உலகத்தையே உருமாற்ற வேண்டும் என்பதே அவரது நினைவு. பரமாத்மாவை வெளிப் படுத்தும் பரிபூரணக் கருவி யாக என்றும் விளங்க வேண்டும். அதன் மூலமாக அதிகமான வெற்றியும் வெளிப்பாடும் மற்றும் உருமாற்றமும் உடனடியாக நிகழ வேண்டும். அற்புதமான இப்புவியின் அனைத்து வகையான நிகழ்கால- எதிர்காலத் துன்பங்களும் அறவே நீங்கிவிட வேண்டும். ஸ்ரீ அன்னையின் விருப்பம் இதுவே!

அதற்காக ஓர் ஒளி பொருந்திய பாதையில் அனைவரையும் அழைத்துச் செல்வதே அவரது உன்னத அவா. அதுவே அவரது தியானம், உணர்வு, ஆவல், தரிசனம், கனவு- அனைத்துமே! தெய்வீக வாழ்வு பூமியில் மலர்வது உறுதியே என உணர்த்தும் வகையில் இறைவனுடன் ஒன்றிப்போகும் தருணங்கள் பல அவரிடம் தென்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக அவர் எழுதி வந்த குறிப்புகளே ஓர் ஆன்மிகக் காவியம்.

""மாந்தர் எவ்வளவோ துக்கமுற்றிருக்கின்றனர். அறியாமையில் ஆழ்ந்திருக்கின்றனர். எவ்வ ளவோ உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது...

இறைவனே!

எல்லாருக்கும் அமைதியும் ஒளியும் அளிப்பா யாக... உலரட்டும் கண்ணீர்! தீரட்டும் கஷ்டம்! மறையட்டும் வேதனை! மாறட்டும் சோதனை! உறையட்டும் அமைதி! உறுதிபடட்டும் மனம்! உன்னிடம் கதறிக் கேட்கிறேன்... அனைவர்தம் சோகத்தையும் சுட்டெரி. இந்த இதயங்களுள் மகிழ்ச்சி ஒளியைச் செலுத்து. அதனை ஒளியாக மாற்றக்கூடிய வல்லமையை அருள்புரிக!''

தெய்வீக அன்னையின் திருவுள உணர்வுகள் அனைத்தும் இந்த உலகத்திற்காக உருவானது. அவருடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் மனித வாழ்வில் தெய்வ இணைப்பை ஏற்படுத்துவதற்கு உகந்தவை. இந்த உணர்வுடன்கூடிய மாற்றமே யோக சாதனையின்போது வெளிப்பட்டு உன்னதமாகிறது. பொலிவு தருவதான உணர்வின் உருமாற்றத்தால் புதியதோர் வாழ்க்கையில் புகுவதே மனிதனின் இன்றைய முதற்கடமை. முழுமையான - நிறைவான உணர்வின் வெளிச்சத் தால், தெய்வீகப் பேரொளிப் பிழம்பான கடவு ளைக் காண்பதற்கான தருணம் வந்துவிட்டது. அதன்பொருட்டு மேலிருந்து பூமிக்கு இறங்கி வந்த ஒரு தேவதையே அன்னை! பூமிக்கு ஒளியூட்ட வந்த அந்த தேவதையின் ஆன்மிக அனுபவமே வேத அனுபவம்.

வேதத்திலும் புராணத்திலும் சொல்லப்பட்ட "பூமியுடன் தெய்வத் தத்துவம் சங்கமம் ஆகும்' என்னும் இந்த வாக்கே தெய்வீக அன்னை வழிகாட்டு வது. இறைவனின் உணர்வில் இடையறாமலிருக்க ஸ்ரீ அன்னை யின் வாசகமே திருவாசகம்.

""இறையருளே!

என் காணிக்கையை ஏற்பாயாக. என் எண்ணங்களும், என் உணர்ச்சிகளும், என் வாழ்வில் எல்லா அசைவுகளும், என் உடலில் ஒவ்வொரு அணுவும், என் உதிரத்தின் ஒவ்வொரு சொட்டும் உன்னுடையதேயாகும். நான் முழுவ தும் முற்றும் ஒரு தயக்கமுமில்லாமல் உன்னுடைய வளே. எனக்கு நீ என்ன முடிவெடுத்தாலும் எல்லாம் உன்னுடையதே. வாழ்வோ சாவோ, இன்பமோ துன்பமோ- வரும் எதையும் நான் வரவேற்பேன்.''

அகமும் புறமும் ஒளிவீசும் சூழ்நிலையில் மனிதத் தன்மையை எளிதாக மாற்றிவிட இயலாது. அதற்குத் தேவையானதையெல்லாம் அளிப்பவரே ஸ்ரீஅன்னை. மனிதனின் புதுப் பிறப்பிற்கு அன்னையின் கருணைக் கடாட்சம் தான் உகந்த வழி. அவரருளாலே அவர் தாள் வணங்கிதான் அனைத்தும் அரங்கேற வேண்டும். அப்படிப் பட்ட உணர்வு ஒன்றே உணர்வின் உருமாற்றத் திற்கு அடிப்படையானது. "அதனை நடத்த வேண்டி யது நாளை அல்ல... அதிலும் இன்றே!' என்கிறார் ஸ்ரீ அன்னை அடிகள்.


நன்றி - நக்கீரன்