சிவலிங்க உருவை நினைவூட்டும் நாகலிங்கபூ
சிவாலயங்களில் கருவறையில் மட்டுமின்றி, உள் மற்றும் வெளிப் பிராகாரங்களிலும் சிவபெருமானின் அருவுருவ வடிவமாகத் திகழும் சிவலிங்கத்தை நாம் தரிசிக்கிறோம். பொதுவாக சிவலிங்க மூர்த்தத்தைத் தரிசிக்கும்போது பக்தர்கள் மனதில் ஒரு உன்னதமான பக்தியும் மனநிறைவும் ஏற்படுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு "நாகாபரணம்' எனப்படும் வெள்ளி அல்லது தங்கத்தாலான அணிகலனை சார்த்தி, அதன்மீது அலங்காரங்கள் செய்யும்போது, சிவலிங்கத்தின் கம்பீரமும் வனப்பும் நம் நெஞ்சை அள்ளுகின்றது.
நாகாபரணம் சார்த்தப்பட்ட சிவலிங்கத்தைப் போன்றே அமைப்புள்ள ஓர் அழகிய மலர்தான் நாகலிங்கப்பூ ஆகும். இந்த மலரை தெலுங்கு மொழியில் "நாகமல்லி' என்றும்; "மல்லிகார்ச்சுனம்' என்றும் அழைக்கின்றனர். அழகிய வட்ட வடிவமான வெண்மைநிற ஆவுடை, அதன் நடுவில் சிறிய பாணலிங்கம், சிவலிங்கத்தின்மீது கவிழ்ந்து குடை பிடிப்பது போன்ற எண்ணற்ற தலைகளையுடைய நாகம், ஆவுடையாரைத் தாங்குவதுபோல் குங்கும நிறத்தில் ஐந்து இதழ்கள்- இத்தகைய தோற்றம் கொண்ட ஒரு அழகான மலர்தான் நாகலிங்கப் பூ.
"பிரேஸில்நட்' என்ற குடும்பத்தைச் சேர்ந்தது நாகலிங்க மரமாகும். இந்த மரம் நம் நாட்டைச் சேர்ந்ததல்ல! தென் அமெரிக்காவின் பிரேஸில் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பலவகை மரங்களில் இதுவும் ஒன்றாகும். கரடுமுரடான மேல்பட்டை யுடன் தூண்போல உயர்ந்து வளரும் தன்மையுடையது இந்த மரம். இதில் ஆரஞ்சு, குங்கும நிறம், இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் மலர்கள் மலர்கின்றன. இந்த மலர்கள் பீரங்கி குண்டுகளைப் போன்று உருண்டு திரண்ட காய்களாக மாறுகின்றன. இதனால் இந்த மரத்திற்கு பீரங்கி குண்டு மரம் (கானன் பால் மரம்) என்று பெயர் ஏற்பட்டது. மரத்தைச் சுற்றிலும் ஒட்டிக்கொண்டிருக்கும் தவிட்டு நிறக் காய்களைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கும்.
நாகலிங்க மலரானது, நாகாபரணத்து டன் திகழும் சிவலிங்கத்தை நினைவுபடுத்துவதால், பல சிவாலயங்களில் இது வளர்க்கப்படுகிறது. பூக்கள் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றன. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், நாகர்கோவில் நாகராஜர் ஆலயம் போன்ற இடங்களில் இந்தப் பூக்கள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு ஆலயங்களில், அப்பகுதியில் அதிக அளவில் காணப்படும் ஒரு மரம் ஆலயத்தின் தலவிருட்சமாகப் போற்றப்பட்டு வருவதும், அந்த மரத்தின் பெயரை ஒட்டியே ஆலயத்தின் பெயர் அமைந்திருக்கும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் நாகலிங்க மரம் நம் நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதால், இது எந்த தலத்திலும் தல மரமாக இல்லை. இந்த மலரை நாம் நம் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும்போது ஒரு அழகிய சிவலிங்கத் திருமேனியை நாம் நம் கையில் வைத்திருப்பது போன்ற ஒரு மென்மையான உணர்வை அனுபவிக்க முடியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக