திங்கள், 14 மார்ச், 2011

உங்களால் ஆகாத செயலும் உண்டோ?


தீர நெஞ்சுடையோராலேதான் துன்பத்தைக் கண்டு சிரிக்க முடியும், எப்பொழுதும் புன்முறுவலோடு இருக்க முடியும்; மனமார்ந்த மகிழ்ச்சிக் குரலைவிட இதமானது (Cordial) வேறொன்றும் இல்லை. ஆங்கில மொழியில் Cordial என்ற சொல்லும் Courage என்ற சொல்லும் ஒரே வேரிலிருந்து தோன்றியவை. உள்ளத்திலிருந்து எழும் மகிழ்ச்சிக்குரல் இக்கட்டான வேளைகளில் ஒருவகைத் துணிவைத் தரும்.

எப்பொழுதும் ஒருவன் சிரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் மலர்ச்சியும் அமைதியும் கூடிய மனநிலை, உள்ளத்திலே ஓர் உவகை இவை எப்பொழுதும் விரும்பத்தக்கவைகளே. இக்குணங்களால் எத்தனை அரிய தொண்டுகளெல்லாம் நிறைவேறுகின்றன!

இக்குணங்களால்தான் ஒரு தாய் தன் வீட்டை குழந்தைகளுக்கு ஓர் இன்பப் பூங்காவாக ஆக்குகிறாள், மருத்துவமனைகளிலே தாதிகள் நோயாளிகளை விரைவில் குணமடையுமாறு செய்கின்றனர், ஒரு முதலாளி தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு அவர்கள் செய்யும் வேலை பெரும் பாரமாகத் தெரியாதபடி செய்கிறார், தொழிலாளிகள் பணி நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டுகின்றனர், தொலைத்தூரப் பயணி கடினமான பாதை வழியே தனது சகாக்களைக் அழைத்துச் செல்கிறான், தேசபக்தன் தேசமக்களின் உள்ளத்தில் நம்பிக்கை அணைந்துபோகாமல் காக்கிறான்.

இன்பக் குழந்தைகளே, நீங்கள் எப்பொழுதும் மனமகிழ்ச்சியுடனிருந்தால் உங்களால் ஆகாத செயலும் உண்டோ?

-அன்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக