செவ்வாய், 9 நவம்பர், 2010

பயம் என்ற நோயை விரட்டுங்கள்

* மனிதர்களின் குறைபாடுகளில் முக்கியமானதும், களையப்பட வேண்டியதும் அச்ச குணம் ஆகும். மனதில் பயம் இருப்பவர்களால் எந்த செயலிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. எனவே, அவர்களால் எதிலும் வெற்றி பெற முடியவதில்லை. அஞ்சாமையே ஒருவனை உயர்ந்த இடத்தில் வைக்கும். எனவே, அச்சம் எனும் நோயை விரட்ட வேண்டும்.

* நீங்கள் ஒருவருக்கு பணிந்து நடக்கும் சூழ்நிலை வந்தால், அவர்களிடமிருந்து விலகி வேண்டுமானால் இருக்கலாம். அதற்காக பயந்து ஒதுங்கிவிடக்கூடாது. உங்களது முழு வலிமை, நேர்மை மற்றும் பொறுமையை பயன்படுத்தி அச்சத்தை மனதில் இருந்து அறவே விலக்கிவிட வேண்டும். அச்சம் கொண்டுள்ளவர்களைக் கண்டால், கோழை கூட மிரட்டி விளையாடுவான். எனவே, அச்சம் தவிருங்கள்.

* மனிதர்களை களங்கப்படுத்தும் செயல்களில் எல்லாம் அச்சம் பிரதானமாக இருக்கிறது. அது, இறைவன் உங்களுக்கு கொடுத்த கடமையைக்கூட எளிதாக முடிக்க விடாமல் தடுக்கிறது. இறைவன் ஒவ்வொருவருக்கும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், வலிமையையும் கொடுத்திருக்கிறார். மனதில் பயம் இருப்பவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைப்பதில்லை.

* பயமில்லாமல், உண்மையைக் கூறுவதால், உங்களை கடுமையாக பாதிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வரும் எனத் தெரிந்தாலும், அதற்காக கலங்கிவிடாதீர்கள். மனதில் இறைவனை எண்ணி, பயமின்றி சத்தியத்தையே பேசுங்கள். அப்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக