சனி, 22 ஜனவரி, 2011

மகான் ஸ்ரீ அரவிந்தர்

ஆகஸ்க்ட் 15 அன்று பாரத சுதந்திர தினம். யோகி ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினமும் கூட. அவரது வாழ்விலிருந்து சில சம்பவங்களை இங்கே நினைவு கூர்வோம்.

கல்கத்தாவில் வாழ்ந்து வந்த டாக்டர் கிருஷ்ண தன கோஷ் – சுவர்ண லதா தேவி தம்பதியினருக்கு, 1872 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி, மூன்றாவது குழந்தையாய் அரவிந்தர் பிறந்தார்.



மாஸ்டர் அரவிந்தர்

டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டோ கான்வென்ட்டில் அவரது பள்ளிப் படிப்பு கழிந்தது. பின்னர் தனது கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்தார் அரவிந்தர். லத்தீன், பிரெஞ்சு உட்படப் பல மொழிகளைக் கற்றுக் கொண்டார். உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்தார். 1884 ஆம் ஆண்டில், தனது பனிரெண்டாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். அங்குள்ள புகழ் பெற்ற செயின்ட் பால்ஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார். கல்வியை முடித்த பின் இந்தியா திரும்பினார்.

ஆனால் அரவிந்தர் வந்த கப்பல் விபத்துக்குளாகி விட்டது என்ற வதந்தியைக் கேள்விப்பட்ட அவரது தந்தை மாரடைப்பால் காலமானார். மனத்தைத் தேற்றிக் கொண்ட அரவிந்தர் பரோடா சமஸ்தானத்தில் பணியில் அமர்ந்தார். பின் அங்குள்ள கல்லூரியின் பேராசிரியராக உயர்ந்தார். நாளடைவில் சுதந்திரதாகத்தால் ஈர்க்கப்பட்டார். அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

மகான் அரவிந்தர்

அதனால் வெகுண்ட அங்கிலேயே அரசு அவரைக் கைது செய்து அலிப்பூர் சிறையில் அடைத்தது. சிறையில் ஸ்ரீ விவேகானந்தர், ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் அரவிந்தருக்குக் கிடைத்தது. மனம் யோக மார்க்கத்தில் திரும்பியது. சில வருடங்களுக்குப் பின் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அங்கு தீவிர யோக சாதனையில் ஈடுபட்டார். அவ்ரை நாடி வந்த ஸ்ரீ அன்னை அவரது பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். மானிடன் அதி மானிட நிலைக்கு உயர வேண்டு என்று உழைத்தார். தெய்வீக சக்தியை புவிக்கு இறங்கி வரவேண்டும் அதி தீவிரமாக முயற்சித்தார். அவர் 1926ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தனது பிறந்த நாள் அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். தன் யோக சாதனையில் கடந்த ஆண்டு வரை இருந்த தடைகள் முற்றிலுமாய் விலகி விட்டன என்றும், இனி விரைவில் பல மகத்தான செயல்கள் நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்

அதே ஆண்டு நவம்பர் 24 அன்று சாதகர்கள் அனைவரும் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் முன் அமர்ந்து தியானத்தில் மூழ்கினர். சற்று நேரத்தில் ஒரு மிகப் பெரிய பேரொளி மேலிருந்து கீழே இறங்கி வருவதை அனைவரும் உணர்ந்தனர். தங்கள் தலைக்கு மேலே ஓர் தெய்வீக சக்தி வியாபிப்பதை அறிந்து பரவசப்பட்டனர். மேலிலிருந்து இறங்கியது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் சக்தி என்றும், மேல் நிலை மனத்திற்கான புதிய திரு உரு மாற்றப்பணி தொடங்கி இருப்பதாகவும் ஸ்ரீ அரவிந்தர் அறிவித்தார். அன்று முதல் அது ஆசிரமத்தில் சித்தி நாள்என்று கொண்டாடப்படலாயிற்று.

யோகி அரவிந்தர்

டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி. 1950 ஆம் வருடம். இறையாற்றலை புவி மீது இறக்கு அதி மனிதனை உருவாக்க வேண்டும் என்று அயராது பாடுபட்ட மகாயோகி அரவிந்தர் மகா சமாதி அடைந்தார். ஸ்ரீ அரவிந்தர் இறந்தும் அவரது உடல் ஒளிவீசிக் கொண்டிருந்தது. கிட்டத்தட ஐந்து நாட்கள் அந்த மகா யோகியின் உடல் வாடாமல் இருந்தது. பின்னர் டிசம்பர் 9 ஆம் நாள். ஸ்ரீ அரவிந்தர் உடல் கருங்காலி மரப்பெட்டியில் வைக்கப்பட்டு, ஆசிரம முற்றத்தில் உள்ள, ஸர்வீஸ் மரத்தடியில், ஆசிரம சாதகர்களின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது..

இன்றும் ஸ்ரீ அரவிந்தர் – ஸ்ரீ அன்னை இருவரும் தம்மை நாடி வருவோருக்கு நல்வழி காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக